110 வயதான போலண்ட் ஹகுரு மெனியேல் இலங்கையின் மிக வயதான நபர்
காலி, கரந்தெனியவில் வசிக்கும் 110 வயதான போலண்ட் ஹகுரு மெனியேல் (Bolland Hakuru Meniyel) இலங்கையின் மிக வயதான நபர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
1915 ஜூன் 4ஆம் தேதி பிறந்த அவர், வாழ்நாள் முழுவதும் விவசாயம் மற்றும் கிராம சேவைக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர். வயதான போதிலும், இன்னும் படிக்கவும் எழுதவும் முடிகிறது என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
மெனியேலின் குடும்பத்தினர் நச்சுகள் இல்லாத உணவுமுறை மற்றும் எளிய வாழ்க்கைமுறை தான் அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என கூறுகின்றனர். ஒன்பது குழந்தைகளின் தந்தையான அவர், மத நடவடிக்கைகளில் தீவிர பங்களிப்பால் ஊருக்கே பிரபலமானவர்.
சமீபத்தில், காலி மாவட்டச் செயலாளர் தர்மசிறி அவரது இல்லத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கினார். அரசாங்கத்தின் நூற்றாண்டு உதவித்தொகையையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும், 100 பேரப்பிள்ளைகளுடன் முதியோர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மெனியேல் இன்று, காலியின் பாரம்பரியத்தையும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நினைவுகளையும் தாங்கிய உயிரோடு இருக்கும் வரலாறு எனக் கருதப்படுகிறார்.
