இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய தேசியத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இளைஞர் தொழில்முனைவு உபக்குழு, இதற்கான விசேட குழுவை நியமித்துள்ளது.
இந்தத் தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
இக்குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அரச வங்கிகள் மற்றும் நிதியமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க கூட்டத்தில் கலந்துகொண்டு,
“இளைஞர் தொழில்முனைவோருக்கான சிறப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டால், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க அமைச்சு தயாராக உள்ளது,” என தெரிவித்தார்.
அத்துடன், தொழில்முனைவோரைக் கண்டறியும் அளவுகோல்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், தெரிவுசெய்யப்படும் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வி.எஸ். ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சானக மதுகொட, இஸ்மாயில் முத்து முகமது ஆகியோர் மற்றும் பல அரச அதிகாரிகளும் பங்கேற்றனர்.
